முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுதிப்பதில் உள்ள தடங்கல்கள்: நீதியமைச்சர் அலி சப்ரி விளக்கம்!

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருப்பது அரசாங்கம் அல்ல. அது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பக் குழுவே நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு அச்சப்படுகிறது.

எனினும் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொரோனா தொற்றை நாட்டிலிருந்து இல்லாமலாக்குவதற்கும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவாக குணமடைய வேண்டியும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற துஆ பிராத்தனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாளொன்றுக்கு எனக்கு 100 தொலைபேசி அழைப்புகள் வந்தால் அதில் 99 அழைப்புகளில், கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு பதிலாக நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கமுடியாதா என்றே கேட்கின்றனர்.

ஜனாஸா எரிப்பு விவகாரத்தினால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள வேதனையை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். அது தொடர்பில் நான் என்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன்.

மேலும் இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்கி வருகின்றனர். இன்னும் சிலர் இதுதொடர்பாக முன்வைக்கும் சாதாரண கோரிக்கையை பார்த்து எங்களை அடிப்படைவாதிகள் என தெரிவிக்க முற்படுகின்றனர். இதில் எந்த அடிப்படைவாதமும் இல்லை.

உலகில் இருக்கும் 189 நாடுகளில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் ஆரம்பகாலத்தில் இந்த வைரஸ் தொடர்பாக எங்களுக்கு அச்சம் இருந்தது. ஏனெனில் அது தொடர்பில் போதிய அறிவு இருக்கவில்லை. ஆனால் தற்போது இது தொடர்பில் சாதாரண அறிவு எங்களுக்கு உள்ளது.

அதனால்தான் கடல் மட்டத்துக்கு குறைவாக இருக்கும் பிரதேசங்களில் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே முஸ்லிம்களின் ஜனாஸாக்களையும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

அதனால் நாங்கள் அடிப்படைவாதிகள் ஆக முடியாது. சாதாரண கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனை நிராகரிக்க முடியாது.

கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறதா என்பதை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து, சமூகத்தில் எந்தவகையிலும் பரவாத முறையில் நல்லடக்கம் செய்ய முடியுமான முறையை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் மீண்டும் முன்வைத்திருக்கின்றோம்.

இதன் மூலம் நாங்கள் நாட்டின் சட்டத்தை மீறி செயற்படுவதாக அர்த்தம் கொள்ள முடியாது. உலக சுகாதார அமைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைக்கமையவே முன்வைத்திருக்கின்றோம்.

கொரோனாவினால் உயிரிழந்த ஒருவரை பொலித்தீன் பையினால் சுற்றி, 8 அடி ஆழத்தில் புதைப்பதன் மூலம், அந்த சடலத்தில் கொரோனா வைரஸ் இருந்தாவும் எப்படி அது பரவும் என்ற கேள்வியை எங்களிடம் கேட்கின்றனர். அதனைத்தான் நாங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டி இருக்கின்றது.

மேலும், எமது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பது அரசாங்கம் அல்ல. இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் 18 பேர் கொண்ட குழுவே, அடக்க அனுமதித்தால் ஏதோவொரு வகையில் வைரஸ் பரவும் என்ற அச்சத்தினால் இதற்கு அனுமதிவழங்க அச்சப்படுகிறது.

இந்த குழுவில் இரண்டு முஸ்லிம் வைத்தியர்களும் உள்ளனர். அமைச்சரவையிலும் இதுதொடர்பாக நான் பேசினேன். அதன் பின்னர் அமைச்சரவையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த 18பேர் கொண்ட குழுவை கடந்தவாரமும் நாங்கள் சந்தித்துப் பேசினோம். ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் இதனை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் உள்ளனர்.

எனினும் நாங்கள் தொடர்ந்தும் இது தொடர்பாக எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எப்படியாவது எமது ஜனாஸா க்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

அதனால் முஸ்லிம்கள் சற்று பொறுமையாக இருக்கவேண்டும். இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்தோ அல்லது வெளிநாட்டு தூதரகங்களில் முறையிட்டோ இதனை பெற்றுக்கொள்ள முடியாது. அதன் மூலம் இந்தப் பிரச்சினை மேலும் அதிகரிக்கலாம். இது தொடர்பாக தீர்மானம் எடுக்கவேண்டியது 18பேர் கொண்ட அந்த தொழில்நுட்ப குழுவே என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.