நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்...!

கொவிட் 19 நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்த 23 வயதான இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு - மோதரைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனுடன் ஏற்பட்ட கொவிட்19 நோயும் அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொவிட் 19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 12 ஆயிரத்து 970 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

நேற்றையதினம் மாத்திரம் 400 பேருக்கு கொவிட் 19 தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் மற்றும் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் மற்றும் பேலியகொடை மீன்சந்தை ஆகிய இரட்டைக் கொத்தணிகளில் கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 492ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொவிட்19 நோயில் இருந்து பாதுகாப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று துறைசார்ந்த அமைச்சில் இடம்பெற்றிருந்தது.

வெலிக்கடை சிறையில் நேற்றையதினம் 23 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக அங்கு 30 கைதிகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

நேற்று தொற்றுக்குள்ளான 21 பெண் கைதிகளும், 1 ஆண் கைதியும்; வெலிகந்தை கொவிட்19 வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்தநிலையில் கொவிட்19 பரவலில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு கோரி நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் போராட்டத்தையும் நடத்தி இருந்தனர்.

இதேவேளை ஹட்டனில் மேலும் 2 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அண்மையில் இறுதியாக அடையாள காணப்பட்ட பெண்ணின் 48 வயதான கணவர் மற்றும் 16 வயதான மகன் ஆகியோருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.

அவர்களுக்கு இன்றைய தினம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வரும் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த ஒருவருக்கும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தலவாக்கலை, மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, வத்தளை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 32 வயதான பெண் ஒருவருக்கே இன்று தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

இந்தநிலையில் அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்கூடத்தில் 248 பேருக்கு நேற்று மேகொள்ளப்பட்ட பரிசோதனையில், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களாக உறுதிப் படுத்தப்பட்டவர்கள்.

அவர்கள் மூவரும் பேலியகொடை மீன்சந்தை பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாக தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 563 பேர் நேற்று குணமடைந்தனர்.

இதற்கமைய நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் புனானை சிகிச்சை நிலையத்தில் இருந்தே குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொவிட் 19 நோயாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்தநிலையில் இந்த பகுதிகளில் நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கொவிட் 19 அலையால் 2ஆயிரத்து 115 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அங்கு கடந்த இரண்டு தினங்களில்; 5 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.