முஸ்லிம்களுக்கு தனி அனுமதி எதற்கு? பெளத்த அமைப்புகள் போர்க்கொடி!

கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தால் அவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என முஸ்லிம் சமூகத்திடமிருந்து கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக பெளத்த தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்து அஸ்கிரி பீட உப தலைவர் நாரம்பனாவே ஆனந்த தேரர் கூறுகையில், உலகில் இன்று பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயானது, இலங்கையிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிங்களவர்களா, முஸ்லிம்களா, தமிழர்களா கிறிஸ்தவர்களா என பார்த்து இந்த வைரஸ் பரவவில்லை.

எனவே நாம் நாடாக இணைந்து இந்த சவாலை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு இனம், ஒரு மதம் மாத்திரம் தமக்கு ஏற்றால் போல் செயற்பட வேண்டும் என வாதிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

கொரோனா வைரஸ் பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றால் அவரது உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது சுகாதார நிபுணர்களின் தீர்மானத்தை பொறுத்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த நாட்டில் கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெளத்த சிங்களவர்களை கூட எமது பெளத்த மத சடங்குகளுக்கு ஏற்ப நல்லடக்கம் செய்ய முடியாதுள்ள நிலையில் நாம் அவற்றை பெரிது படுத்தாது சட்டத்துக்கு கட்டுப்பட்டு சுகாதார நிபுணர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு நடக்கின்றோம்.

நாட்டின் இன்று நிலவும் மோசமான சூழலில் எமது சடங்குகளை நடத்தக்கூடிய நேரம் இதுவல்ல. அவ்வாறு இருக்கையில் இனவாத, மதவாத நபர்களின் கருத்துக்களுக்கு கட்டுப்படாது அரசாங்கம் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு அதற்கு ஏற்றால் போல் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார்.

சிங்கள ராவய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இது குறித்து கூறுகையில், கொவிட் -9 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த எவரதும் உடல்களை புதைக்க அனுமதி இல்லை என சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறும் அதே வேளையில் சிலோன் தெஹ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்களின் உடல்களை புதைக்க அனுமதி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் அனுமதி வழங்காது எவ்வாறு இவர்கள் இதனை கூற முடியும். ஆகவே அரசாங்கம் இதில் இரட்டை வேடம் போடுகிறது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் வளைந்து கொடுக்க முடியாது. நாட்டில் இப்போதுள்ள நிலையில் சகலருக்கும் சட்டம் ஒன்றாகவே இருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அது முழு நாட்டையும் பாதிக்கும். சிங்களவர் தமிழர் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் என அனைவருக்கும் இதன் தாக்கம் ஏற்படும்.

எனவே முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து சகலருக்கும் ஒரே விதமான நடைமுறை கையாளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

சிங்களே தேசிய அமைப்பு இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் பரவியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக இப்போது வரையில் 40க்கும் அதிகமானோர் உயரிழந்துள்ளனர்.

நாடே இன்று முடங்கியுள்ள நிலையில் ஒரு இனத்தவர் மட்டும் தமக்கான மதச் சடங்குகளை கேட்டு முரண் பிடிப்பது இலங்கையர் என்ற ரீதியில் கேள்வியை எழுப்புகிறது. இன்று நாட்டில் சகலரும் ஒரே விதமாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் அனைவருமே மீள வேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும். எனவே கொவிட் -19 வைரஸ் பரவலினால் உயிரிழந்த சகலருக்கும் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் நல்லடக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பொதுபல சேனா அமைப்பினரும் இதே கருத்தையே முன்வைத்திருந்தனர். கொவிட் -19 வைரஸ் தாக்கத்தில் உயிரிழந்த முஸ்லிம்களில் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி அடிப்படைவாதத்தை மீண்டும் உருவாக்குவதாகவும், முஸ்லிம்கள் தமது கடமைகளை செய்வதில் எந்த தடையும் இல்லை என்றாலும் இந்த சூழ்நிலையில் அவர்கள் பொதுவான நிலைமையை கருத்தில் கொண்டு நடந்துகொள்ள வேண்டும் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.