இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயமான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது பல தடைகள், பல சவால்களுக்கு மத்தியில் இன்று (நவம்பர் 26) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி மாலை 6.50 மணிக்கு ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக் தொடரானின் தொடக்க விழாவில் பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் (augmented and virtual reality technologies) பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்போது இலங்கையின் கலாசாரம், பாரம்பரியம், பொழுதுபோக்கு மற்றும் மிக முக்கியமாக இலங்கையில் கிரிக்கெட்டின் பதிவுகள் என்பன காட்சிப்படுத்தப்படும்.
கொழும்பு கிங்ஸ், தம்புள்ள வைக்கிங், காலி கிளாடியேட்டர்ஸ், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கு பற்றும் இத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
அதன்படி 15 நாட்கள் நடைபெறும் இத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் முதல் போட்டியில் இலங்கை நட்சத்திரமான அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும், இலங்கையின் மற்றொரு நட்சத்திரமான குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளது.
ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் 8 ஆட்டங்களில் போட்டியிடும். அதில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அரையிறுதிப் போட்டிகள் 2020 டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நடைபெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு நுழையும். இறுதிப் போட்டியானது டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெறும்.
வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார நடவடிக்கைகளின் மிக உயர்ந்த தரத்துடன் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
Post a Comment