காயமடைந்த கைதிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

மஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 48 பேரில், 26 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 70க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 48 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர்.பரிசோதனையின் பெறுபெறுகளின் படி, 26 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதியாகி இருக்கிறது.

இதேவேளை, மஹர சிறையில் பதிவான பதட்டநிலைமை தொடர்பாக விசேட விசாரணைகளை நடத்துமாறு, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, காவற்துறை மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்டிருந்த அமைதியின்மையின் போது பரவிய தீயின் காரணமாக, சிறைச்சாலை கட்டிடம் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

அதன்படி பல சிறைக்கூடங்களும், சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் இரண்டு அலுவலகங்களும், உணவு காப்பகம் மற்றும் சிறைச்சாலை பதிவகம் என்பனவும் தீயினால் சேதமடைந்துள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முதலில் சிறைச்சாலையின் தாதி ஒருவரை சிறைபிடித்த கைதிகள், இரண்டாவது நுழைவாயிலை உடைத்துக் கொண்டு வெளியில் செல்ல முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி அவர்களை கட்டுப்படுத்தியுள்ளனர்.

அதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்தனர்.

பின்னர் கைதிகள் குழப்பகரமாக நடந்துக் கொண்ட போது, காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று, காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் காவற்துறையினர் அல்லது விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்குள் சென்று எந்த செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சிறையின் ஒரு அதிகாரியின் அலட்சியமான செயற்பாடும் இந்த குழப்பநிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளமை தெரியவந்திருக்கிறது.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் நிலவிய பதற்ற நிலைமை காரணமாக 8 பேர் கொல்லப்பட்டதுடன், 71 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியிட முடியாதிருப்பதாகவும், சிறைச்சாலைகளின் பதிவகம் எரித்தழிக்கப்பட்டிருப்பதாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டது.

இன்றையதினம் சபையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ஒரு ஜனநாயக நாட்டுக்கு இது பொருத்தமானது இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் 200க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிந்துக் கொண்டதன் பின்னரும், அரசாங்கம் சிறைச்சாலையில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

அதேநேரம், ரிவேர்ஸ் என்ற ஒருவகையான மாத்திரையை உட்கொண்டே கைதிகள் இந்த குழப்பத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் விமல் வீரசன்ச இன்று சபையில் வைத்து தெரிவித்தார்.

குறித்த மாத்திரையை உட்கொண்டால் பிறரின் இரத்தத்தை பார்ப்பதற்கு அது தூண்டும் எனவும், அவ்வாறு திட்டமிட்டு மாத்திரைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு இந்த குழப்பநிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி கைதிகள் சிலர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தங்களுக்கான பிணை வழங்கலை துரிதப்படுத்துமாறு கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.