கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இன்று கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 14 ஆம் திகதி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபர் கண்டி நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடுகண்ணாவ ஹேனவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் , கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவேற்றும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு துறையின் கணிணி தொழிநுட்ப பிரிவினரால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கொரோனா மரணங்கள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தினை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைத்தளங்’களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment