இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்...

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன்படி, ராஜகிரிய பிரதேச முதியோர் இல்லத்தில் வசித்த 51 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 7ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான மிக அண்மித்த காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 10 பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அவரது சடலம் கடந்த 8ஆம் திகதி பிரேத பரிசோதனைகளுக்காக கையளிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், றாகமை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து றாகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவருக்கு காணப்பட்ட நீண்டகால புற்றுநோயின் தாக்கம் அதிகரித்தமையே மரணத்திற்கான பிரதான காரணம் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இது நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட 41ஆவது மரணம் எனவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 125 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 430 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 460 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன் குறித்து கண்காணிக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 233 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவந்த மேலும் 657 பேர் குணமடைந்த நிலையில் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 537 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 493 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் ஆறு லட்சத்து 10 ஆயிரத்து 836 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 38 பேர் நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் 64 ஆயிரத்து 75 பேர், இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 27 தனிமைப்படுத்தல் நிலையங்களில், இரண்டாயிரத்து 362 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான தேசிய செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.