அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்றிரவு நடைபெறும் நிலையில், கொழும்பு அரசியலில் பதற்றநிலை உச்சகட்டத்துக்குச் சென்றிருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆளும் கூட்டணியின் முழுமையான ஆதரவை இதற்காகப் பெற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்திருப்பதே இதற்குக் காரணம் என்றும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றின் அதிருப்தியைச் சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழு அளவில் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில் பிரதான எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளுடனான பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெறுவதாகத் தெரிகின்றது.
குறைந்தபட்சம் மூன்று பேரையாவது 20 க்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கான பேரப் பேச்சுக்கள் இன்று காலை வரையில் இடம்பெற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தமிழ் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி பிரதான எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் சிலர் 20 க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இலங்கையில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இன்றைய தினம் அரசாங்கம் அதனை நிறைவேற்றியே தீருவோம் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது.
குறிப்பாக, இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் பௌத்த சங்கத்தினரும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள். எனினும் அரசாங்கம் அதனை நீக்குவது தொடர்பில் எந்த முடிவினையும் எடுக்கவில்லை. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமை விவகாரத்தில் உறுதியாக இருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே, ஆளும் கட்சிக்குள் பலர் எதிர்ப்ப தெரிவித்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் அரசாங்கத்தின் திருத்தத்திற்கு ஆதரவான வாக்குகள் குறையும் சாத்தியம் இருப்பதாகவும் சில ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment