முஸ்லிம்களின் பிரச்சினைகளை பெரிதாக்கும் ஊடகங்கள்...!

முஹம்மட் ஹாசில் (ஊடகவியலாளர்)

இனங்கள் மீதான வெறுப்புப் பிரசாரங்கள் தடுக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பெரும்பான்மைச் சமூகம் இன்னமும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர். நெருக்கமாக, நண்பர்களாக உறவாடியவர்கள் கூட இன்று முகம் சுளித்து வேறுபக்கம் திரும்புவதை வெளிப்படையாகவே காண முடிகிறது. சிறிய குழு செய்கின்ற சில சில தவறுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்ப்பது நியாயமானதாகக் கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும், இதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் ஏதும் அறியாத அப்பாவிகள் பாதிக்கப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. அது அநீதியான காரியமாகப் பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் சந்தேகங்களும் முரண்பாடுகளுமே மக்களின் இதயங்களில் குடிகொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சமூகங்களுக்கிடையே அமைதியும், ஒற்றுமையும் நிலைபெறச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்ய வேண்டிய பெரும் கடப்பாட்டை ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம். ஊடகங்களுக்கும் இதில் பிரதான பங்குண்டு என்பதை நாம் மறந்து விட முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடக தர்மம் மீறப்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் கூடியவிதத்தில் சின்னச் சம்பவங்களை ஊதிப் பெருப்பித்துச் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு அவர்களுக்குண்டு. ஊடகங்கள் ஒழுங்கு விதிமுறைகளைப் பேண வேண்டியதன் அவசியம் ஆரம்பம் முதல் வலியுறுத்தப்பட்ட போதிலும் சில ஊடகங்கள் அதனைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகத்தான் ஊடக தர்மத்தை மீறிச் செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கடந்த காலங்களில் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

முஸ்லிம் சமூகம் இன்று அச்சத்திலும், அதிர்ச்சியிலும், பீதியிலும் மூழ்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இத்தகைய இக்கட்டான சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளும் நோவினை மிக்க பயத்தினூடாக இலங்கை முஸ்லிம்கள் தாம் இத்தகைய ஆபத்தில் சிக்குவதற்கான காரணம், அதற்கு வழிகோலிய ஏதுக்கள் பற்றிய சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியமும் இன்று உணரப்பட்டுள்ளது. அத்துடன் ஊடகங்களும் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்வது வரவேற்கத்தக்கதாகும். நெருக்கடிமிக்கதொரு நிலைமைக்குள் நாடு பயணித்துக் கொண்டிருப்பதை ஒரு தடவை எண்ணிப் பார்க்க வேண்டும்.

குறிப்பிடத்தக்க சில பிரதான ஊடகங்கள் தொடர்ச்சியாக மக்கள் மயப்படுத்தும் செய்திகள் முஸ்லிம் சமூகத்தை குத்திக்கிழிப்பது போன்ற வேதனைமிக்க உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. இதனைத் தளர்த் தவேண்டிய பாரிய கடப்பாட்டை அவை கொண்டிருக்கின்றன. இத்தகைய பாரதூரமான செயற்பாடுகளை தளர்த்தாது தொடருமானால் சகிப்புத்தன்மையோடும், பச்சாதாபத்தோடும் சுயவிமர்சனத்தின் பக்கம் செல்வதற்கான வழி வகைகளை கண்டறிவது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தளவில் மிகச் சிக்கலான காரியமாகும்.

இன்று ஊடகத்தில் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் கூட இஸ்லாத்தின் மீதான பீதிமனப்பான்மையை நயவஞ்சகமாக கையாண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் மேற்குலகம் நீண்டகாலமாகவே இரகசியமான முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சட்டம் தனது கடமையை செய்வதற்கு முன்னதாகவே தாமாகவே தீர்ப்பு வழங்கும் விதத்தில் இந்த ஊடகங்கள் செயற்பட்டுவருகின்றன. இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி இந்த ஊடகங்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

சில ஊடகங்கள் அரசியல் பின்னணியில் நின்று செயற்படுவதால் அவை மனித சமூகம் பற்றி சிந்திக்காது தமது இலக்குகளை அடைந்துகொள்வதற்காகவே இயங்கிக்கொண்டிருக்கின்றன. சில ஊடகங்கள் பயன்படுத்தும் பிரதான தலைப்பு வாசகங்கள் சமுதாயத்தை வேதனைக்குட்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மக்களின் இதயங்களை வெட்டிக்கிழிப்பது போன்று பார்க்க முடிகிறது. இதனை மனிதாபிமானம் கொண்ட எவரும் அனுமதிக்கப் போவதில்லை. 

அண்மைக்காலமாக நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் சரியான முறையில் மனிதாபிமான ரீதியில் பார்க்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகும். ஆத்திரமூட்டும் விதத்தில் செய்திகள், தகவல்கள் பரப்பப்படுவதால் ஏற்படக்கூடிய அபத்தமான சம்பவங்கள் தர்மமானதாக பார்க்க முடியாதுள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் ஒரு கைங்கரியத்தில் இவை ஈடுபட்டு வருகின்றன. இதனை நாகரிகமாக நோக்கவே முடியாது. எமக்கான ஒழுக்கம், பண்பாடு, கலாசாரங்களை மதித்து செயற்படும் போது, நாம் வீழ்ந்திருக்கும் கிலியிலிருந்து மீண்டெழ முடியும்.

நடந்தேறிக் கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கின்ற போது அவற்றை தேசப்பற்று மிக்கதாகவோ இனப்பற்று அல்லது மதப்பற்று என்றோ கொள்ள முடியாது. நாட்டுப்பற்று, தேசபற்று, மதப்பறறு, இனப்பற்று என்பவை மற்றொரு சமூகத்தை இம்சிப்பதாகவோ, பழிப்பதாகவோ அமைந்து விடக்கூடாது.இதன் மூலமே இனவாதம் தலைதூக்கிவிடுகின்றது. இனவாதம் மேலோங்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது. இலங்கையர் என்ற நாட்டுப்பற்றுடன் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் தேசத்தை வெற்றிகொள்ளச் செய்ய முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.