கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு, உடனடித் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடி விஜயம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ திட்டமிட்டுள்ளார்.

மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டு, அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு, அதன்மூலம் உரிய தீர்வைப் பெற்றுத்தருவது இதன் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் அடிப்படையில், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவு, ஜனாதிபதியின் முதலாவது நேரடி கள விஜயத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 100 ஏக்கர் பிரதேசத்தில் அமைந்துள்ள குமாரதென்ன வித்தியாலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு முதலாவது மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நீண்ட காலமாக தீர்க்கப்படாத பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளின் காரணமாக, கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றமை, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதார பிரச்சினைகள், இடம் மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை, காணிகளுக்கு முறையான உறுதிப்பத்திரம் வழங்கப்படாமை, போதுமான சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகள் இன்மை, மாணவர்களின் கல்வி சார் பிரச்சினைகள் மற்றும் பாடசாலை பற்றாக்குறைகள், பயிர்ச்செய்கை மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை, காட்டு யானைகள் கிராமங்களுக்குள் உள்நுழைகின்றமை மற்றும் விவசாய பொருட்களை விற்பனை செய்வதில் காணப்படும் பிரச்சினைகள் ஆகியன பிரதான பிரச்சினைகளாக இதன்போது ஜனாதிபதியினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கிராமப்புற மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய அரச நிறுவனங்களின் அலட்சியம் மற்றும் வினைத்திறனின்மை ஆகிய காரணங்கள் இந்த பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாதிருக்கின்றமைக்கு பிரதான காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஜனாதிபதியின் கிராமங்களுக்கான நேரடி விஜயம் மக்களுக்கு முன்னுரிமையளித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக செலவழிக்கப்படும் தொகை மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும், கொழும்பிலிருந்து அதிகாரிகள் கிராமங்களுக்கு செல்வதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆகவே, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் பிரதேச அதிகாரிகள் மாத்திரமே ஈடுபட்டுவருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், மக்கள் சந்திப்புக்கு நேரடியாக வருகைதந்து தாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, தன்னிடம் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முடியுமானவரை உடனடித் தீர்வைப் பெற்றுத்தருவதே தனது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பின்னர் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்கான கள விஜயத்தில் 2 கிராம சேவையாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் வசிக்கும் 222 குடும்பங்களின் பிரதான வருமான மார்க்கமான, நெல், மிளகு மற்றும் இலவங்கப்பட்டை பயிர்ச்செய்கை ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, மக்கள் சந்திப்பு இடம்பெறும் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 100 ஏக்கர் பிரதேசத்தில் அமைந்துள்ள குமாரதென்ன வித்தியாலயத்தில் 17 மாணவர்களே கல்வி கற்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.