கட்டுபொத்தை முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரை - விபத்தா? நாசகார செயலா?

குருணாகல் மாவட்டம், கட்டுபொத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுபொத்தை நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான சில்லறை வியாபார நிலையம் தீக்கிரையாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த வர்த்தக நிலையத்தில் தீ பரவுவதை அவதானித்தவர்கள் பொலிஸார் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி முற்றாக கடை சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந் நிலையில் இந்த தீ பரவரல் விபத்தா அல்லது நாசகார செயலா என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.

குறித்த வர்த்தக நிலையமானது கட்டுபொத்தை நகரில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் வர்த்தக நிலையமாக கருதப்படுகின்றது. ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வட மேல் மாகாணமெங்கும் இடம்பெற்ற முஸ்லிம்களை இலக்கு வைத்த வன்முறைகளின் போதும் இக்கடை அடையாளம் தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் கட்டுபொத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை அது தொடர்பிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறான பின்னனியில் கடந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பின் பின்னரும் இக்கடையின் பின் பக்க கதவுப் பகுதி ஊடாக கடைக்கு தீ வைக்க முயற்சிக்கப்பட்டிருந்தது. எனினும் தீ பரவ ஆரம்பித்ததும் அருகே இருந்தவர்கள் அதனை அவதானித்து பொலிஸாருடன் சேர்ந்து அதனை அனைத்ததால் பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டது. அது தொடர்பிலும் பொலிஸ் முறைப்பாடு உள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பிலும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை.

இவ்வாறான நிலையிலேயே இன்று அதிகாலை 12.30 மணிக்கும் 1.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அந்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியுள்ளது. அப்போது வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்துள்ள நிலையில், தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையைப் பெற்று மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கும் பொலிஸார், பொருள் சேதம் தொடர்பில் உடனடியாக மதிப்பிடப்படவில்லை எனவும், தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய விசாரித்து வருவதாகவும் கூறினர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.