விசேட தேவையுடைய நபர் ஒருவரின் தலைமையில் கேகாலையிலிருந்து கம்பளைக்கு கார் ஒன்றில்கடத்திச் செல்லப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருட்களை கம்பளைப் பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த காரில் பயணித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்
கம்பளை பொலிஸாருக்குகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்து கம்பளைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக கண்காணிப்பில் ஈடு பட்ட வந்த நிலையிலேயே குறித்த நபர்கள் கேகாலையிலிருந்து அம்புலுவாவ வழியாக கம்பளை நோக்கிச் சென்ற சந்தர்ப்பத்தில் கம்பளை நிதாஸ் மாவத்தையில் வைத்து பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.
சனிக்கிழமை பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அன்றைய தினமே கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர் வரும் 3 ஆம் திகதி வரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்று தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
கேகாலை கரடுவன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களிடமிருந்து வெவ்வேறு பெயர்களிலான 7 வங்கி அட்டைகள், மூன்று பணவைப்புப் புத்தகங்கள் நான்கு கைத் தொலைபேசிகள் ஹெரோயின் போதைப் பொருள் இவர்கள் பயணித்த கார் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
இதன் பிரதான சந்தேக நபரான விசேட தேவையுடைய நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணைகளிலிருந்து குறித்த நபர் கம்பளைப் பிரதேசத்துக்கான பிரதான ஹெரோயின் விநியோகஸ்தராக செயற்பட்டு வந்துள்ளதுடன் குறித்த வியாபாரத்துக்கு தொலைபேசி பணப் பரிமாற்றல் பணம் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு நபர்களின் பெயர்களில் வங்கி அட்டைகளைப் பதிவு செய்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான வீடு ஒன்றை நிர்மாணித்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்தது.
குறித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் விசாரணையின் பின்னர்
நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மேலும் குறிப்பிட்டன.
Post a Comment