ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகளில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளை சுகாதார அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொற்று நீக்கி, முகக்கவசங்கள், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளி பேணுதல் ஆகியவை அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை மாத்திரம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையையும், ஒவ்வொரு நிறுவன சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானிப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment