தாழமுக்கம் சூறாவளியாகக்கூடும்: அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக விருத்தியடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது தற்போது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மா – ஓயாவின் நீர்மட்டம் கிரியுல்ல பகுதியில் உயர்வடைந்துள்ளது.

இதனால் கிரியுல்ல – மரதகொல்ல பகுதியில் சிறிதளவு வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை தொடருமாயின் கிரியுல்ல – குருணாகல் வீதியின் கிரியுல்ல பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, களனி கங்கையின் ஹொலொம்புவ பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

குகுலே கங்கை மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கேகாலை மாவட்டமே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் வௌ்ளத்தில் சிக்குண்ட 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கேகாலை வல்தெனிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண்​ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் இதுவரை 530 குடும்பங்களை சேர்ந்த 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவான இடங்கள் முதல் கட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மழை தொடருமாயின் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவதானத்துடன் செயற்பட வேண்டிய பகுதிகள் இரண்டாம் கட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான இடங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் தொடர்பில் அபாயம் நிலவுமாயின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் மூன்றாம் கட்டப் பகுதிகளிலிருந்து மக்கள் வௌியேற வேண்டியது கட்டாயமானதாகும்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான பகுதிகள் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், இதுவரை அவ்வாறான இடங்கள் அடையாளங்காணப்படவில்லை.

மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் பாதுகாக்கான இடங்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதனால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிற்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.