முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள்!

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் (சடலங்கள்) தகனம் செய்வதற்கு எதிராக இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று தரப்புக்கள் அது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கைகளை முனெடுத்து வருகின்றன.

அத்துடன் தவறான மருத்துவ அறிக்கையால் கொரோனா தொற்றாளராக அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 52 வயதான முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் சடலம் தகனம் செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பிலும் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய முஸ்தீபுகள் இடம்பெறுகின்றன.

கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சியினால் ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2170/8 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சட்ட மா அதிபர் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஒரு அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு இலத்திரனியல் மூலம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் சார்பில் ஹில்மி அஹமட், பாத்திமா சில்மா மொஹிதீன் மற்றும் மொஹம்மட் பிஸ்ரி கஸ்ஸாலி ஆகியோரை மனுதாரர்களாக கொண்ட அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றில் விடயங்களை தெளிவுபடுத்தி வாதிடவுள்ளார். இதற்காக சட்டத்தரணி கட்டணத்தையும் அவர் பெறாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மேலும் சில முஸ்லிம் தரப்புக்களும் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றன. அதில் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கனக்கிரஸ் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. பாயிஸ் ஊடாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, தவறான மருத்துவ அறிக்கையினால் கொரோனா என கண்டறியப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் மோதரை பகுதியைச் சேர்ந்த 25 52 வயதுடைய பெண்ணின் சடலமும் கொரோனா உயிரிழப்பின்போது முன்னெடுக்கபப்டும் நடவடிக்கைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் தற்போதும் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நிலையில், அவர்கள் சார்பிலும் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.