ஊரடங்கை எங்கு தளர்த்துவது.. எங்கு நீடிப்பது குறித்து தீர்மானிக்கிறது அரசாங்கம் ! : முழு விபரம் இதோ !

எதிர்வரும் திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச உயர் மட்டத் தகவல்கள் வீரகேசரிக்கு தெரிவித்தன.

பிராந்திய சுகாதார பணிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய, அரசாங்கம் இது குறித்து கூடிய அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூடிய இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு தளர்வு நடைமுறையாகும் என அந்த தகவல்கள் உறுதி செய்தன.

எனினும் ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வரும் போதும், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளை அமுல் செய்ய தீர்மானித்துள்ள அரசாங்கம், தற்போதும் அபாய வலயங்களாக உள்ள 6 மாவட்டங்களில் 4 மாவட்டங்களை தொடர்ந்தும் ஊரடங்கு நிலைமையின் கீழேயே வைத்திருப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றது.

தற்போது மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 நிர்வாக மாவட்டங்கள் கொரோனா அபாய வலயமாக உள்ளன.

இதில் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியையும் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சாதாரண நிலைமையின் கீழ் கொண்டுவர சுகாதார ஆலோசனைகள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களை மட்டும் தொடர்ந்தும் ஊரடங்கு நிலைமையில் வைத்து கண்காணிக்க இன்று காலை வரையில் அரசாங்கம் இணங்கியிருந்தது.

இலங்கையில் இன்று மாலை 6 மணியாகும் போதும், 3 வெளிநாட்டவர்கள் உட்பட 242 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

15 நிர்வாக மாவட்டங்களிலேயே அந்த தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், மொணராகலை, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, முல்லைதீவு, மன்னார், கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, இந்த 10 மாவட்டங்களையும் விஷேடமாக, ஊரடங்கு நிலைமையில் இருந்து விடுவித்து, அம்மாவட்டங்களில் அன்றாட மக்கள் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஏனைய 15 மாவட்டங்களில் அபாய வலயங்களில் உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 11 நிர்வாக மாவட்டங்களிலும் இருக்கமான நடை முறைகளின் கீழ் ஊரடங்கை திங்கள் முதல் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொது மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் விஷேட அறிவிப்பினை வெளிப்படுத்தவும் தீர்மானித்துள்ளது.

சுகாதார தரப்பினரிடம் இருந்து அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள பரிந்துரைகள் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் ( அபாய வலய மாவட்டங்கள் தவிர) ஒவ்வொரு நாளும் முதற் கட்டமாக காலை 6.00 மணிக்கு ஊரடங்கை நீக்கி, இரவு 8.00 மணிக்கு மீள அமுல் செய்வது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார், அரச ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தும் போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றவும், தனியார் துறை ஊழியர்களின் சேவை ஆரம்பத்தை காலை 10.00 மணி முதல் முன்னெடுக்கவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து நிறுவங்களும் இரவு 8.00 மணிக்குள் தமது வேலை நேரத்தை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான படிப்படியான நடை முறைகள் ஊடாக அன்றாட மக்கள் வாழ்வை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை தபாலகங்களில் குவிந்துள்ள தபால்களை பகிரும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய் முதல் ஆரம்பிக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். தபால் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ள கடிதங்கள் மற்றும் பொதிகளை வகை பிரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 3 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாக கூறினார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் அபாய வலய மாவட்டங்களில் 20 வீதமான ஊழியர்களும் அபாயமற்ற மாவட்டங்களில் 50 வீதமான ஊழியர்களையும் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தபால் மா அதிபர் இதனை குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.