ரழமான் மாதத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சவோ பகிர்ந்தளிக்கவோ வேண்டாம்: வக்பு சபை

கொவிட் 19 நெருக்கடி நிலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரழமான் மாதத்திலும் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகளை நடாத்த வேண்டாம் என வக்பு சபை வேண்டுகோள்விடுத்துள்ளது. அத்துடன் ரழமான் மாதத்தில் பள்ளிவாசல்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கடந்த 15.03.2020 அன்று வக்பு சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளே மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

விடயம் : இலங்கை வக்ப் சபையின் றமழான் 2020 க்கான பணிப்புரைகள்
15.03.2020 திகதியன்று இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் றமழான் மாதம் முழுவதற்கும் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்.


1. அதற்கேற்ப, இமாம் / முஅத்தின்மார் அல்லாத எந்தப் பொதுமக்களுக்காகவும் பள்ளிவாயல்களைத் திறக்க வேண்டாம் என்றும்,


2. ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடாத்த வேண்டாம் என்றும்,


3. இப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடாத்த வேண்டாம் என்றும்,


4. பள்ளிவாயிலின் உள்ளோ அல்லது பள்ளிவாயல் வளாகத்தின் உள்ளோ, கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும்,


5. பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கும் இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும், கொவிட்- 19 தொடர்பான சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும் இலங்கை வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல் நிருவாகிகளையும் பணிக்கின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.