இலங்கையில் கொரோனா அபாய சூழல் அதிகரிப்பு : கொழும்பின் பல இடங்கள் முடக்கம் ; புறக்கோட்டையில் மொத்த விற்பனை நிலையங்களும் மூடல்


கொழும்பு மத்தி, வடக்கு பகுதிகளில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது.

கம்பஹா மாவட்டம், ஜா எல - சுதுவெல்ல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலரின் நடமாட்டம் மற்றும் தொடர்பாடல் வலையமைப்பை மையபப்டுத்தி கடற்படை உளவுப் பிரிவும் பொலிஸாரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ள நிலையில் முன் பாதுகாப்பு நடவடிக்கையாக இவ்விரு பகுதிகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ஜா எல தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, கொரோனா தொற்றாளர் ஒருவர் கொழும்பு வடக்கு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் நாகலகம் வீதி பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதால் நேற்று முன்தினம் அப்பகுதி முற்றாக முடக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

ஜா -எல பகுதியில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் நடமாட்டம் தொடர்பில் உளவுத்துறை ஆராய்ந்துள்ள நிலையில் மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ், புறக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த பலரை தனிமைப்படுத்த வேண்டி ஏற்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் பாதுகாப்புத் தரப்பினர் தொற்றாளர்களுடன் தொடர்புடையோரை தேடி கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த, இந்தியாவுக்கு யாத்திரை சென்று திரும்பிய 59 வயதுடைய பெண் ஒருவர் 33 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அதனையடுத்து பண்டாரநாயக்க மாவத்தையின் அப்துல் ஹமீட் சந்தி வரையிலான பகுதி 58 வீடுகளுடன் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஜா எல தொற்றாளர் ஒருவருடனான தொடர்புகள் காரணமாக, புறக்கோட்டை மற்றும் டாம் வீதி பகுதியில் 80 இற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பட்டும், பலர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் விஷேட பாதுகப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக புறக்கோட்டை பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்ட பலரில், புறக்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரியும் பலர் உள்ளனர்.

இந் நிலையில் புறக்கோட்டையின் மொத்த விற்பனை நிலையங்களை மூடுவதற்கு வர்த்தகர்கள் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தனர். அத்துடன் மெனிங் சந்தையை மூடி வைப்பது தொடர்பிலும் வர்த்தகர்களின் அவதானம் திரும்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொழும்பில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 49 ஆக இருந்தது.

இதில் இறுதியாக நேற்றுமுன்தினம் கொட்டாஞ்சேனை பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இந்தியாவுக்கு யாத்திரை சென்று கடந்த மார்ச் 12 ஆம் திகதி நாடு திரும்பி பொலிஸிலும் பதிவு செய்து 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனினும் 33 நாட்களின் பின்னரேயே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த பெண் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுபவர் எனும் நிலையில், கடந்த 14 ஆம் திகதி அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு மாநகர சபை அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளிலேயே அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந் நிலையில அவரது கணவர் மற்றும் மகனுக்கும் கொரோனா தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மகனுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

இந் நிலையிலேயே பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 58 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானையின் ஸ்ரீ ஜனநானந்த மாவத்தை ஆகிய பகுதிகள் ஏற்கனவே முடக்கப்பட்டு அல்லது கடும் விதிகளின் கீழ் கண்காணிக்கப்பட்டுவரும் நிலையிலேயே நேற்று முதல் புதிதாக கிராண்ட்பாஸ் பகுதியில் நாகலகம் வீதியும், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் பண்டாரநாயக்க மாவத்தையும் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நாகலகம் வீதியின் 113 பேர் ஏற்கனவே சம்பூர் கடற்படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 குடும்பங்கள் வரை அப்பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, ஜா-எல பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் பழகிய நபர் ஒருவர், ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கைது நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் 20 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தெஹிவளை - அத்திடிய பகுதியில் உள்ள பொலிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 20 பேரில் 13 பேர் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் நிர்வகத்தின் கீழும் ஏனையோர் சட்ட மா அதிபர் திணைக்கள பாதுகாப்பு அரணிலும் கடமையாற்றுபவர்கள் என பொலிஸார் கூறினர்.

ஊரடங்கை மீறியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவர் துப்புரவு தொழிலாளியாக செயற்படும் நிலையில் அவருடன் தொடர்புடைய துப்புரவு தொழிலாளர்கள், யாசகர்கள் என பலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறினர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.