இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம்: கண்டிக்கும் முக்கிய இஸ்லாமிய நாடு

ஸ்ரீலங்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதத்தை தூண்டும் வகையில் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளுக்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராச்சியம், அவ்வாறான செய்திகளை உள்ளூர் இணைய ஊடகங்களிலிருந்து உடனடியாக நீக்குமாறும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா நகர நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும் அதனை அடிப்படையாக வைத்து ஸ்ரீலங்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதத்தை தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்ட செய்திகள் தொடர்பிலேயே ஐக்கிய அரபு இராச்சியம் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றது

கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதா? நல்லடக்கம் செய்வதா? என்ற சர்ச்சை ஸ்ரீலங்காவில் நீடித்து வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கடந்தவாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடலங்களை அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு முரணாக தகனம்செய்துவரும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய ராஜபக்ச அரசாங்கம் இதுவரை முன்வரவில்லை.

இதேவேளை வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யக் கோரும்போது அதற்கு எதிராக குரல்கொடுத்துவரும் சிங்கள கடும்போக்குவாத கட்சிகளினதும், அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பதால் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முஸ்லீம்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் பேசுவதற்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளனர்.

ஆனால் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அனைவரின் மத்தியிலும் பகிரங்கமாக பேசுவதற்கே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணங்கியிருந்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கான இறுதிக்கிரியைகளின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் யுனஸ்கோ நிறுவனத்தின் அறிவுரைகள் என்பவற்றில் காணப்படும் முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி இத்தகைய தொற்றுநோயினால் இறப்பவர்களை எரிக்காமல் அதற்கு மாற்றீடாக அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதமருடனான சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

சுகாதார ரீதியாக மட்டுமல்லாது மக்களின் மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வதன் அவசியம் பற்றி அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றையும் அவர் கோடிகாட்டியிருந்தார்.

எவ்வாறெனினும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயமானது ஸ்ரீலங்காவில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் கொழும்பிலிருந்து இயங்கும் பிரதான தொலைக்காட்சிகள் உட்பட பெரும்பாலான சிங்கள இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சார்ஜா நகரை மேற்கோள்காட்டி முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்டிருந்தன.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா நகரில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்வதாக அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தன.

இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு அரசு இராச்சியத்தின் தூதரகம் தெரிவித்துள்ளது.

“சார்ஜாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்வதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்றும் ஐக்கிய அரபு இராச்சியத் தூதரகம் அறிவித்துள்ளது.

அதேவேளை “எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் உடல்களையும் புதைப்பதை ஐக்கிய அரபு இராச்சியம் தடை செய்யவில்லை என்றும், தகனம் செய்யவும் அறிவுறுத்துவதில்லை என்றம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.