தெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது! அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதாக இல்லாத காரணத்தினால் முன்பு தெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் எப்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றதோ அன்றிலிருந்து இரண்டு வாரகாலத்தினுள் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள சிரமங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச தரப்பினர் இதனை அறிவித்தனர்.

இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதுள்ள நிலைமைகளில் அரச பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற சரியான திகதியை அறிவிக்க முடியாதுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கின்ற காரணத்தினால் இப்போதைக்கு பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாதுள்ளது.

அதேபோல் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் விண்ணபங்களை பெற்றுக்கொடுக்கவும் சிரமமாக உள்ளது. எவ்வாறு இருப்பினும் அரச பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படுகின்றதோ அதில் இருந்து இரண்டு வார காலத்திற்குள் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் விண்ணப்பப்பத்திரம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் நிதியும் கடந்த மாதம் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதனை வழங்க அரச நிதியில் திறைசேரியில் இருந்து 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது. எவ்வாறு இருப்பினும் இப்போது திறைசேரியிலும் நிதி பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால் அரச வங்கிகளின் மூலமாக நிதியை பெற்று மாணவர்களின் கணக்குகளுக்கு நிதியை செலுத்தியுள்ளோம்.

ஆகவே கடந்த மாதம் தாமதமான புலமைப்பரிசில் நிதி இப்போது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்விக்கான ஊடக நிகழ்வுகள் நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வீடுகளில் இருந்தே கல்வி கற்றும் விதத்தில் கல்விக்கான ஊடகம் ஒன்று அவசியம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய அரச தொலைக்காட்சியில் அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளது என்றார்.

கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விண்ணப்பத்திற்கான இறுதித் திகதியாக ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பபடிவங்கள் மற்றும் சான்றிதல்கள் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும் கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளிலும் இரு தினங்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என விசேட கோரிக்கை விடுத்திருந்தோம்.

எனினும் நிலைமைகளை கருத்தில் கொண்டு இப்போது மாற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படுகின்றதோ அன்றில் இருந்து இரண்டு வார காலத்திற்கு (14 நாட்கள் ) பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணபங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


ஆகவே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை.

பாடசாலைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பிக்கலாம் என இருந்தாலும் உறுதியாக எந்தவொரு தீர்மானமும் எடுக்க முடியாது உள்ளது. தற்போதுள்ள வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக எம்மால் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை உள்ளது.

ஆகவே மாணவர்களுக்கான இணைய கற்கையை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். நாட்டில் பாடசாலைகளில் கற்கையை தொடரும் 47 இலட்சம் மாணவர்கள் உள்ளனர்.

அதேபோல் ஆரம்ப கல்வி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் இவர்கள் அனைவரையும் இணைத்தால் 5.5 மில்லியன் மாணவர்கள் நாட்டில் உள்ளனர்.

ஆகவே இவர்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் தலையீட்டில் துரித கல்விமுறை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம் எடுத்துள்ளோம்.

அரச ஊடகங்களில் தமிழ், சிங்கள அலைவரிசையில் மாணவர்களுக்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இந்த கற்கைகள் ஆரம்பிக்கப்படும். மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.