இலங்கையில் 12 பகுதிகள் முற்றாக முடக்கம் ; அதிக கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் பதிவு - முழுமையான விபரம் இதோ !


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 33 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந் நிலையில் 9 சிறார்கள் உட்பட 140 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

நேற்று கண்டறியப்பட்ட தொற்றாளர்களில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடந்த மூன்றாம் திகதி முதல் சிகிச்சைப் பெற்றுவரும் நாலரை வயதுடைய குழந்தையும் உள்ளடங்குகின்றது.

அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிலேயே இவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனைவிட நாடளாவிய ரீதியில் மேலும் 30 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 259 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

நேற்று முன் தினமும் நேற்றும் மட்டும் மொத்தமாக 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 வரை அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக புத்தளம், களுத்துறை மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கம்பஹா, கண்டி, யாழ். மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அப்பகுதிகளிலும் அச்சுறுத்தல் நீடிக்கின்றது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் நிலையான முடிவொன்றினை எடுக்க, தற்போது நிலவும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை தொடர வேண்டும் எனவும் அப்போதே கொரோனா பரவல் குறித்த தெளிவான முடிவொன்றக்கு வரமுடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பஆளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறினார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் சூழல் மற்றும் முறைமையை அடிப்படையாக கொண்டு நோக்குமிடத்து தற்போதைய கால கட்டம் மிக முக்கியமானது எனவும் இதே கட்டுப்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை தொடர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட, பரவலுக்கான அதிக வாய்ப்புக்கள் உள்ள 12 பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தின் அரியாலை - தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம மற்றும் பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியின் ஒரு பகுதி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை - போரத்தொட்டை, கொழும்பு மாவட்டத்தின் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ரத்மலானை - அர் ஜனமாவத்தை, குருணாகல் மாவட்டத்தின் - கட்டுபொத்தை - கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதி, மத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ - அக்குரஸ்ஸ – மாலிதுவ -கொஹூகொட பகுதி ஆகியனவே இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற நிலையில் அத்திட்டிய, ரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளை சேர்ந்த மூவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளின் கணிப்பீட்டின் படி ரத்மலானை ஸ்ரீ ஜனமக மாவத்தை முற்றாக முடக்கப்பட்டதாக இரத்மலானை மருத்துவ அதிகாரி ஜே.எம்.குணதிலக தெரிவித்தார்.

அத்துடன் வெல்லம்பிட்டிய, அத்திடிய பகுதிகளிலும் தேவையாவ படஹுகபபு வழி முறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிதாக முடக்கப்பட்ட பகுதிகளில் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ - அக்குரஸ்ஸ, மாலிதுவ -கொஹூகொட பகுதியும் நேற்று முன்தினம் இணைந்தது. அப்பகுதியில், ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்கு உள்ளான ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அப்பகுதி முற்றாக முடக்கப்பட்டது.

இன்றைய தினம் மாத்தறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும் போதும், இந்த பகுதியி தொடர்ந்தும் முடக்கத்திலேயே இருக்கும் என பொலிசார் கூறினர். அத்துடன் குருணாகல் மாவட்டத்தின் - கட்டுபொத்தை - கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியிலும் இன்று தளர்த்தப்படும் ஊரடங்கின் போது எவரும் உள், வெளிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

முடக்கப்பட்டுள்ள ஏனைய 10 பகுதிகளும் உள்ளடங்கும் மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்வதால் அங்கு சிக்கலில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் பொலிஸ் நிலையங்களில் சுய தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்தோர் 43 ஆயிரத்து 500 பேர் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில் 18 ஆயிரம் பேர் சுய தனிமைபப்டுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் தற்போதும் 25 ஆயிரத்து 500 பேர் வரை சுய தனிமைபப்டுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 11 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்குள் வந்து பதிவு செய்தவர்களே இவர்கள் என சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிச் மா அதிபர் அஜித் ரோஹன, இக்காலப்பகுதியில் இலங்கைக்குள் வந்து மீள வெளிநாடு செல்ல முற்படும் அனைவரும் தனிமைப்படுத்தல் நிறைவை உறுதிச் செய்யும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.