பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படுகின்ற பகிரங்க கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்துவதற்கு, உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி இது தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள், பதில் பொலிஸ்மா அதிபரின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
COVID 19 எனப்படும் கொரோனா வைரஸ், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தொற்றுநோயாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், COVID 19 தாக்கத்தை நாட்டில் பரவவிடாது கட்டுப்படுத்தும் வகையில், 1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுகின்ற நபர்களை, பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, .இவ்வாறான குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டால், பிணை வழங்காது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்படும் சந்தேநபருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்படாது, அவரை விளக்கமறியலில் வைக்க முடியும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சட்டத்தின் 14 ஆவது சரத்தின் பிரகாரம் அதிகாரம் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிடுகின்றது.
அத்துடன், கொரோனா தொடர்பில், பொது மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கும், தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள வேண்டாமென இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, அனைத்து வகையான தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெளிவுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment