கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்
அவர்களில் 13 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மூன்று ஆண்களும் 37, 50 மற்றும் 73 வயதுகளையுடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 73 வயதான கராப்பிட்டிய மருத்துவமனையிலும் ஏனையவர்கள் ஐ.டி.எச். மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொடர்பாக பேஸ்புக் ஊடாக போலி தகவல்களை வெளியிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
பண்டாரகம மற்றும் ராகமை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொவிட் 19 தொற்றியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் 22 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் உள்ள 11 நூதனசாலைகளும் தற்காலிகமாக மூடுவதற்கு புத்தசாசன கலாசார மற்றும் மதவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று பரவி வரும் அபாயம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அத்தியாவசிய சேவையை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் தேசிய கண் மருத்துவமனைக்கு வருமாறு அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கூடும் அளவினை இயன்றளவு குறைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதற்கு அமைய இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திடீர் விபத்து, மாதாந்த சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் தேசிய கண் மருத்துவமனைக்கு வருவது உகந்ததாகும் என மருத்துவமனையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 14 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஒஸ்ரியா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராச்சியம், பெல்ஜியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்றியுள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்;ட போதிலும் அவர் அதனை மீறியமைக்கு எதிராகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆடைகள் கொள்வனவு செய்ய செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆடைகள் ஊடாக வைரஸ் பரவுவதை தடுத்தல் மற்றும் மக்கள் அதிகளவில் கூடுவதை நிறுத்துதல் போன்ற செயற்பாடுகள் காரணமாகவேஅந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் வழங்கப்பட்ட விடுமுறை நாளைய தினம் நீடிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவையை நாளை முதல் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
எனினும், அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக சாதாரண சேவை ஊடாக வழமைபோல விண்ணபிக்க முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்தியாவசியாக விடயங்களுக்காக தேசிய அடையாள அட்டையை விரைவாக பெற்று கொள்ள வேண்டுமாயின் கிராம உத்தியோகத்தர் ஊடாக உறுதிப்படுத்தி அதனை பெற்று கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டிற்குள் ஆட்கள் நுழையும் வானுர்தி தளங்கள் மற்றும் துறைமுகங்கள் என்பவற்றின் செயற்பாடுகள் கட்டங் கட்டமாக நிறுத்தப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment