கிறிஸ்தவ ஆலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்ற 4 முஸ்லிம்கள் சந்தேகத்தில் கைது


மட்டக்களப்பு புனித செபஸ்ரியான் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு முஸ்லீம்கள் தேவாலயத்துக்குள் சென்றவேளை ஏற்பட்ட பரபரப்பையடுத்து குறித்த 4 பேரையும் மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த தேவாலயத்தில் இன்று ஞாயிறு காலை ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்போது இங்கு இரு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட முஸ்லீம்கள் ஆலயத்தினுள் நுழைந்துள்ளனர்.

இதன்போது, அங்கு ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்ததையடுத்து அவர்களை பிடித்து ஆலயத்தின் அருட்தந்தையிடம் கொடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்பாறை இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண், 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள், 23 வயதுடைய மகன், 33 வயதுடைய மருமகன் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் வாய் பேசமுடியாத மகளின் நோயை குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்துக்கு வந்ததாகவும் அங்கு ஆலயம் பூட்டப்பட்டிருந்ததால், அதன் ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் சென்றார்கள் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.