முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி, காவல்துறை தலைமையகத்தில் இன்றைய தினம் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான மொஹமட் முஸம்மில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அமெரிக்க வங்கி ஒன்றில் உள்ள கணக்கு ஒன்றில், கடந்த 52 நாட்களில் ஒரு இலட்சம் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ வெளியிட்ட தகவல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அந்த முறைப்பாடில் கோரப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி நடத்திய ஊடக சந்திப்பின்போது, அவர் இந்தத் தகவலை வெளியிட்டதுடன், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பதில் காவல்துறைமா அதிபர் மற்றும் குறறப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம், கடந்த ஆட்சிக் காலப்பகுதியில், சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான பல ஆவணங்கள், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அண்மையில் கொழும்பில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மீட்கப்பட்டிருந்தாகவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தேசிய சுதந்திர முன்னணியினால் காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், தனது கௌரவத்திற்கு களங்கம் ஏற்பத்தியமைக்காக அமைச்சர் விமல் வீரவன்ஸவிடம் 100 கோடி ரூபா நட்டஈடு கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment