100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு - தெரிவு செய்யப்படும் முறை இதோ....

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கத்துக்கு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் பாரிய அளவில் கிடைத்து வருகின்றது. 

அரச அதிகாரிகள் தொடர்பில் நம்பிக்கை இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெவித்தார். 

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பலநோக்கு அபிவிருத்தி செயலணி முன்னெடுக்கும். திணைக்களத்துக்கு விரைவில் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து விசேட குழுவின் மூலம் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதற்கான குழு இவர்களின் தகைமை குறித்தும் கண்டறியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

பிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அரசாங்கம் பொது மக்களுக்கு மேற்கொள்ளும் சேவையை செயல்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் எந்தவித அரசியல் தலையீடுகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல் என்ற குறிக்கோளை அடையும் நோக்கத்துடன் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பொது தராதர சாதாரண தரத்திலும் பார்க்க குறைந்த கல்வி தரத்தைக் கொண்டவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த திணைக்களத்தின் மூலம் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளளோருக்கு 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் 2020.02.15 திகதிக்கு முன்னர் பயனாளிகள் வாழும் கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க வேண்டும். 

பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றிற்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சியின் பின்னர் தொழில் தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்பு வழங்கப்படும். விவசாய உற்பத்தி உதவியாளர் பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவை உதவியாளர் அடங்கலாக 25 சேவை பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 

இதற்கான விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான விபரங்கள் அடங்கிய விளம்பரத்தை பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் (20.01.2020) ம் திகதி வெளியான தினகரன், தினமின மற்றும் டெய்லி நியூஸ் ஆகிய தமிழ் சிங்களம் ஆங்கிளம் ஆகிய பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.