சீரற்ற காலநிலை தொடரும்... மக்கள் அவதானம்...

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக எதிர்வரும் சில நாட்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் 100 முதல் 150 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலையுடன் களனி கங்கையின் நீர் மட்டம் நாகலகம வீதியில் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே களனி கங்கையை அண்மித்து தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் அத்தனலுகலு ஓயா துனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளது.

இதன்காரணமாக தாழ்நில பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, புளத்சிங்கள பகுதியில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்ற சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பதுளை - சொர்ணாதொட்ட பிரதேத்தைச் சேர்ந்த 88 குடும்பங்கள், கற்கள் புரண்டு வரக்கூடிய அபாயம் காணப்படுவதன் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கின் காரணமாக 69 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அதிக மழை காரணமாக, ஜின், களனி மற்றும் களு கங்கைகள் மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக, நீர் வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் நீர்மட்டம் இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளிலும், அத்தனகல ஓயவின் நீர் மட்டம் துனமலை பகுதியிலும் ஆபத்தான மட்டத்துக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுகிறது.

அனர்த்த முகாமைத்துவ மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு - கொட்டாஞ்சேனை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட ஆமர் - பாபர் சந்தியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வருகின்றவர்கள், மட்டக்குளி - மோதரை ஊடான பாதையைப் பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - நோட்டன்பிரீஜ் பிரதான வீதியின் - எட்லி பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிக்கான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தற்போது மரத்தை அகற்றும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் பொகவந்தலாவை, கேசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ - கிலானி மற்றும் பொகவானை வழியாக பொகவந்தலாவ நரத்திற்கு செல்லும் இரண்டு பிரதான வீதிகளும் நீரில் முழ்கியுள்ளனன.

நேற்று முதல் பெய்து வரும் தொடர்ச்சியான மழைக்காரணமாக கேசல்கமுவ ஒயாவில் சுமார் முன்று அடி உயரத்திற்கு நீர் மட்டம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தெரேசியா, கிலானி, சிங்காரவத்த, பொகவானை, டன்பார் ஆகிய தோட்டபகுதிகளில் பொகவந்தலாவைக்கு செல்வோரும் பாடசாலை மாணவர்களும் பெரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதேநேரம், நிலவுகின்ற மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு கடற்சார் தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.