முஸ்லிம் விவாக சட்டத்தில் பல அதிரடி திருத்தங்கள்; முஸ்லிம் எம்.பிகள் உடன்பாடு!!!

முஸ்லிம்களின் திருமண விவாகரத்து சட்டத்தில் அத்தியவசியமான சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் எம்.பிகள் தெரிவித்தனர். இதற்கமைய, குறித்த யோசனையை விரைவில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவிற்கு சமர்ப்பிக்க இருப்பதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

இது அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. 

திருமண வயதெல்லையை 18ஆக அதிகரித்தல், திருமண பதிவின் போது மணப்பெண் கையெப்பமிடுவதை கட்டாயமாக்குதல், காதி நீதிமன்றத்திற்கு பெண்களையும் நியமித்தல் அடங்கலான யோசனைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிய வருகிறது. 

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட குழுவொன்றை நியமித்திருந்தார்.இது தொடர்பில் இரு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் நீதியரசர் சலீம்மர்சூப் தலைமையில் ஒருகுழுவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஒரு குழுவும் இரு வேறு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.இது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்ட நிலையில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவும் பல முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எம்.பிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளும் பொறுப்பு முஸ்லிம் எம்.பிகளிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கூடி ஆராய்ந்த முஸ்லிம் எம்.பிகள், முஸ்லிம் தனியார் விவாக விவகாரத்து சட்டத்தில் சில மாற்றம் செய்ய முடிவு செய்தது. 

சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்துள்ளனர் என, முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். வயது எல்லை, திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் இணக்கத்தை அறிதல் உள்ளிட்ட சில சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். 

இதே வேளை 11விடயங்கள் அடங்கிய யோசனையொன்றை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.எச்.எம்.பௌசி எம்.பி தெரிவித்துள்ளார். 

இந்த வாரத்தினுள் திருத்த யோசனைகள் நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது. இதேவேளை காதி நீதிமன்றத்திற்கு பெண்களை நியமிக்கும் யோசனைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறிய வருகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.