ஒரே மேசையில் ஒன்றான முஸ்லிம் தலைவர்களும், சமய தலைவர்களும் உருக்கமான கோரிக்கை.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று மாலை (09) கொள்ளுப்பிட்டி மென்டரின் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி உரையாற்றிய போது கூறியதாவது,

முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக இந்த கொடூர கொலைகளையும் வன்முறைகளையும் கண்டிப்பதோடு பயங்கரவாதிகளை இல்லாது ஒழிப்பதில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றது. இஸ்லாம் இந்த வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, இத்தகைய செயலை செய்த கயவர்களை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருவது மட்டுமின்றி இந்த மிலேச்சத்தனமான செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதி உச்ச தண்டனையை வழங்க வேண்டுமென நாங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பிலும் கோரிக்கை விடுக்கின்றோம்.

மிக குறுகிய காலத்தில் இந்த குரூர செயலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் எமது முஸ்லிம் சமுதாயத்தின் பூரணமான ஒத்துழைப்பே காரணம் என நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்த நாட்டின் பொறுப்புள்ள பிரஜைகள் என்ற வகையில் முழு முஸ்லிம் சமூகமும் சொல்லால் மாத்திரமன்றி செயலாலும் கயவர்களை ஒழிப்பதில் ஒத்துழைத்துள்ளோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஊடகங்கள் செய்திகளை மிகை படுத்தி வெளியிட வேண்டாமெனவும் இனங்களை துருவப்படுத்தும் செயல்களை தவிர்க்கும் படியும் தயவாய் கேட்டுக்கொள்கின்றோம்.

முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் 99 சதவீதமான முஸ்லிம்கள் இந்த பயங்கரவாத செயல்களுக்கு எதிராகவே இருக்கின்றனர். இந்த விடயத்தில் எங்களுக்குள்ளே எந்த பேதமும் இல்லை, எமது சகோதரர்களான கிறிஸ்தவர்களின் இறுதிக்கிரியைகளில் கூட நாம் கலந்து கொள்ள முடியாத துர்ப்பாக்கியத்திலும் கவலையிலும் இருக்கின்றோம். முஸ்லிம் என்ற பெயரில் ஒரு சிறிய குழு மேற்கொண்ட இந்த செயற்பாடு தொடர்பில் முஸ்லிம்களுக்கு எதுவுமே தெரியாது. இந்த தற்கொலையாளிகள் சிலரின் மனைவியர்களுக்கு கூட இவ்வாறான செயல் தொடர்பில் தெரிந்திருக்காமலேயே இருந்தது என்பது விசாரணைகளில் தெரியவருவதாக அறிகிறோம்.

எமது சமூகம் பல்வேறு துன்பங்களை அனுபவித்த காலத்தில் கூட நாங்கள் வன்முறைகளை நாடியதில்லை,
கடந்த காலங்களில் காத்தான்குடி பள்ளிவாசலில் 200 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வடக்கில் வாழ்ந்த 1இலட்சம் பேர் ஒரே இரவில் அகதிகளாக்கப்பட்டனர்.

அப்போதெல்லாம் வன்முறையை நாடாமல் இருந்த எமது சமூகம் இப்போது நாடுமா? இந்த பயங்கரத்தின் சூத்திரதாரிகளான கொடுமையாளர்களை சாய்ந்தமருதுவில் எங்களது சமூகமே காட்டிக்கொடுத்தது. காட்டிக்கொடுக்க வேண்டாமென கூறி கட்டுக்கட்டாக காசுகளை அந்த பயங்கர வாதிகள் வீசியபோதும் முஸ்லிம் மக்கள் அதற்கு விலை போகவில்லை எனினும் தேடுதல் நடவடிக்கையின் போது வீணான தொல்லைகள் தரப்படுகின்றன. ஒருமாத காலத்துக்குள்ளே பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முழு மூச்சான ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம் .இந்த சம்பவத்தின் பின்னர் தினமும் அழுதுகொண்டிருகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செய்திகளை வழங்குமாறு வேண்டுகின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது,

இந்த நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது .அவசரமாக நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டிய தேவை உள்ளது என்பது குறித்து நாம் மனம்கொள்ள வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தில் சாதாரணமான குற்றச்செயல்களை புரியக்கூடிய ஆயுதங்கள் மற்றும் தற்காப்பு ஆயுதங்களை முஸ்லிம்களின் வீடுகளில் இருந்து தேடுதலின் போது அவை கிடைத்தால் அதனை காட்டி பயங்கரவாதத்திற்கு தயாராகும் சமூகமாக முஸ்லிம் சமூகம் காட்டப்படுவது வேதனையானது. நடுநிலை தன்மையுடன் இந்த விடயங்கள் பார்க்கப்பட வேண்டும் .சமூக மட்டத்தில் எத்தகைய முழு ஆதரவை நாம் வழங்க முடியுமோ அந்த அளவுக்கு நாம் வழங்கி வருகின்றோம். மிக மோசமான, மிலேச்சத்தனமான, ஈனத்தனமான இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்பதிலும் களைந்தெடுக்க வேண்டுமென்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதோடு மிகைப்படுத்திய செய்திகளை வெளிக்காட்டுவதை தவிர்த்து நாட்டை சுபிட்ச பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும். இவ்வாறு தமது பணிகளை மேற்கொள்வதன் மூலமே அவசியமற்ற பீதியை இந்த நாட்டில் இல்லாதொழிக்க முடியும்.

இந்த நிகழ்வில் ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் உறுப்பினர்கள் ,முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் உட்பட உறுப்பினர்கள், அமைச்சர்களான ஹக்கீம் ,ரிஷாட் பதியுதீன் , ஹலீம் , இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி ,ஹரீஸ் ,பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் , பாராளுமன்ற உறுபினர்களான பௌசி , முஜீபுர் ரஹ்மான்,தௌபீக் ,இஷாக், வீ.சி.இஸ்மாயில் நசீர் ,மன்சூர் ,மஸ்தான் ,பைசர் முஸ்தபா , ஆகியோர் உட்பட சிவில் சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்த்தர்களும் பங்கேற்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget