இலங்கை தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை" - ஜனாதிபதி


இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியொன்றின் ஊடாகவே ஜனாதிபதி இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற சிரேஷ்ட போலீஸ் அதிகாரிகளுடனான கூட்டத்தின் போதும், தனக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி டுவிட்டர் தகவலின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு சபையின் விடயங்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஊடகங்களில் வெளியாகியமையினால், அதனை மாற்றி, தேசிய பாதுகாப்பு குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதன்படி, தேசிய பாதுகாப்பு குழு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கூடியதாகவும் ஜனாதிபதி டுவிட்டர் தள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் பிரதானியும், முன்னாள் பிரதி போலீஸ் மாஅதிபருமான சிசிர மென்டீஸ், நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் கடந்த 29ஆம் தேதி முன்வைத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று கடந்த 22ஆம் தேதி நியமிக்கப்பட்டது.

இந்த தெரிவுக்குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நியமிக்கப்பட்டிருந்தார்.

குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மாரசிங்க, கலாநிதி ஜயம்பத்தி விக்ரமரத்ன, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த குழுவின் விசாரணைகள் கடந்த 29ஆம் தேதி கூடியதுடன், அந்த விசாரணைகள் தொடர்பான செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் சிசிர மென்டீஸ் ஆகியோரும் கடந்த 29ஆம் தேதி நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தனர்.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.