அவசரகால சட்டத்தை நீடிக்க அவசியமில்லையென்கிறார் - ஜனாதிபதி


இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான தலையீட்டை செய்வதாக சர்வதேச நாடுகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளன. 

ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வாறு உறுதியளித்துள்ளனர்.  

பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட் டின் பாதுகாப்பு நிலைமைகளை சர்வதேச தரப்பினருக்கு எடுத்துக்கூறும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும்  ஐக்கிய இராச் சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன்,

அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின்  தூதுவர்களுக்கும்  இடையில் சந்திப்பொன்று நேற்றுக்காலை  இடம்பெற்றது. 

ஜனாதிபதியின்  உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்   ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகளும்  கலந்துகொண்டனர். இதன்போது  பல்வேறு காரணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது,  

குறிப்பாக பயங்கரவாத சவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது தூதுவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாகவும் உறுதியளித்தார். 

அத்துடன் பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும் எனவும் அவர்  குறிப்பிட்டிருந்தார்.  மேலும் நாட்டின் பாதுகாப்புத் துறையினருக்கு வெளிநாட்டு புலனாய்வுத் துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது  நன்றி தெரிவித்திருந்தார். 

தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் இந்த அனைத்து நாடுகளும் வழங்கிய ஒத்துழைப்பையும் பொருளாதார அபிவிருத்திக்கான உதவியையும் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குவதற்கு உதவுமாறும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார். 

இதேநேரம் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டிருப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து வெ ளியிட்ட ஜனாதிபதி , பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும்  குறிப்பிட்டார். 

அத்துடன் சந்தேக நபர்கள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது குறித்தும் ஜனாதிபதி விளக்கினார். 

மேலும் இத்தகைய கொடூர தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதிய சட்டங்கள் வகுக்கப்படுவதுடன், நிறுவனக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட தூதுவர்கள் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளித்தமைக்காக   ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன் , இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான தலையீட்டை செய்வதாக உறுதியளித்தனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget