10 நாடுகள் களத்தில்; இன்று ஆரம்பமாகிறது உலகக் கிண்ண சமர்!


உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது இன்று(30) இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து, மற்றும் வேல்ஸிலில் இன்று ஆரம்பமாகும் இத் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் நடப்புச் சம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா, ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா, விராட் கோலி தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை, மொஷ்ரபி மோர்டாசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் குல்பாடின் நாபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.

46 நாட்கள் நடைபெறும் இத் தொடரில் ஒவ்வொரு அணியும், ஏனைய அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் ஜூலை 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெறுவதுடன் இறுதிப் போட்டி ஜூலை 14 ஆம் திகதி லண்டனில் இடம்பெறும்.

மொத்தம் இங்கிலாந்து, வேல்ஸில் உள்ள 11 மைதானங்களில்  48 போட்டிகள் நடைபெறுகின்றன. 

இங்கிலாந்தில் வெயில் காலம் என்பதால் ஆடுகளம் நன்கு உலர்ந்து துடுப்பாட்டத்துக்கு சாதகமாக அமையும். அதேசமயம் மழை பெய்தாலோ அல்லது மேகமூட்டமான சீதோஷ்ண நிலை உருவானாலோ காற்றின் ஈரப்பதம் காரணமாக ஆடுகளத்தன்மை உடனடியாக மாறி விடும். 

அத்துடன் பந்து நன்கு ஸ்விங் ஆகி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இதற்கு ஏற்ப ஆடுவது தான் துடுப்பாட்ட வீரர்களுக்கு உள்ள சவாலாகும். 
இந்தமுறை உலகக் கிண்ணத்தின் மொத்த பரிசுத் தொகை  10 மில்லியன்களாகும். 

இதில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் வழங்கப்படவுள்ளது (இலங்கை ரூபாவில் 70 கோடி). உலகக் கிண்ண வரலாற்றில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகின்ற மிகப்பெரிய பரிசுத் தொகையாக இது திகழ்கிறது.

அத்துடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் வழங்கப்படவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு 3.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அதன்படி, இம்முறை பரிசுத் தொகை 250,000 அமெரிக்கா டொலர்கள் அதிகமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கும் தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. 

இதேநேரம், லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெறாது வெளியேறும் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.

கிரிக்கெட் உலகில் 5 முன்னணி வீரர்காளான இந்திய அணியின் தோனி, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ்கெய்ல், நியூஸிலாந்து அணியின் ரோஷ் டெய்லர், தென்னாபிரிக்க அணியின் ஸ்டெய்ன், ஹசிம் அம்லா மற்றும் இலங்கை அணியின் லசித் மலிங்க ஆகியோர் இறுதியாக விளையாடும் உலகக் கிண்ணத் தொடர் இதுவாகும்.

இதுவரை நடைபெற்று முடிந்த 11 ஐ.சி.சி. உலகக்க கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி ஐந்து முறை சம்பியனாகியுள்ளது (1987, 1999, 2003, 2007, 2015), மேற்கிந்தியத்தீவுகள் அணி இரு முறை சம்பியனாகியுள்ளது (1975, 1979), இந்திய அணியும் இரு முறையும் (1983, 2011), இலங்கை அணி ஒரு முறையும் (1996), பாகிஸ்தான் அணி ஒரு முறையும் (1992) கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.