விஜயகலாவின் கருத்துத் தொடர்பில் அதிரடி தீர்மானங்கள்!!!

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை , இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தில் அரசியலமைப்போ அல்லது தற்போதைய சட்டமோ மீறப்பட்டிருக்குமாயின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்து தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, இந்தத் தீரமானத்தை மேற்கொண்டதாக சபாநாயகர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பிரதமர் தமக்கு அறிவித்ததாக தெரிவித்தார்.

அத்துடன், விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் தாம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதேநேரம், விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரிப்பதாக அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் இராஜாங்க அமைச்சரிடம் விசாரித்ததாகவும், சிறுமியொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துக் கூற முற்பட்டு, உணர்ச்சிவசத்தால் தாம் இந்த விடயத்தை கூறியதாக விஜயகலா மகேஸ்வரன் தம்மிடம் கூறியதாக அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

எனினும், இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறி, நாட்டின் அரசியல் அமைப்பை மீறியுள்ளதால், அவருக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் நீடிக்க உரிமையில்லை என குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்களானால், அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

அத்துடன், விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பொறுப்பில் இருந்தும் வெளியேற வேண்டும் என குறிப்பிட்டார்.

விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையில், கட்சித் தலைவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, இது தொடர்பில் மிகக் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், அவர்களை அமைதிகாக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார்.

எனினும், தொடர்ச்சியாக சபையில் அமைதியின்மை நிலவியதனால், சபாநாயகரால் சபை சிறிது நேரத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

சிறிது நேரத்தின் பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, விஜயகலா மகேஸ்வரன் விவகாரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல சபைக்கு அறிவித்தபோதும், தொடர்ந்தும் விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

மீண்டும் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை சபையில் இருந்து வெளியேற்றப்போவதாக சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

எனினும், விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, தேவை ஏற்படின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கூறினார்.

இதனையடுத்தும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டுவந்த நிலையில் கருத்து வெளியிட்ட சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, விஜயகலா மகேஸ்வரனால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அது குறித்து விவாதிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பிலான அறிக்கையை கோரியுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

எனினும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டுவந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீரவை சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்தும், சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடர்ந்தும் இடமளிக்கப்படாமல் குழப்பம் ஏற்படுத்தப்பட்டமையினால் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் நாளைய தினம் வரை ஒத்திவைத்தார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget