அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்திய ஸ்டீவனின் பின்னணி


59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்டீவன் பாட்டாக் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டலின் திறந்தவெளியில் 1-ந் தேதி இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணிக்கு சற்றும் எதிர்பாராத வகையில், ஸ்டீபன் கிரேக் பாட்டாக் (வயது 64) என்பவர், தானியங்கி துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர் சுட்டுக்கொண்டிருந்தார்.

இதில் 59 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 527 பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஸ்டீபன் பாட்டாக்கும் உயிரிழந்தார். அவர் அதிரடிப்படை போலீசார் அங்கு வந்துசேர்வதற்கு முன்னால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் தாக்குதல் நடத்தி விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ள ஸ்டீபன் பாட்டாக் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

நெவாடா மாகாணம் மெஸ்குயிட் என்ற இடத்தை சேர்ந்த ஸ்டீபன் பாட்டாக் ஓய்வு பெற்ற கணக்காளர். மேலும், அவர் தீவிரமான சூதாட்டக்காரர். பணக்காரர். அவர் 34 துப்பாக்கிகளை குவித்து வைத்துள்ளார். அவரது வீட்டில் இருந்து 18 துப்பாக்கிகளும், தாக்குதல் நடத்தப்பட்ட ஓட்டலில் அவர் தங்கி இருந்த அறையில் இருந்து 16 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ஸ்டீபன் பாட்டாக், தனது காதலியுடன்தான் மெஸ்குயிட்டில் வசித்து வந்துள்ளார். இந்த தாக்குதல் நேரத்தில் காதலி, டோக்கியோவில் இருந்தார். இந்த தாக்குதலுக்கும் அவருக்கும் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் அவர் அமெரிக்கா திரும்பிய உடன் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

ஸ்டீபன் பாட்டாக்கின் சகோதரர் எரிக் பாட்டாக் போலீசாரிடம் கூறும்போது, “எனது சகோதரர் ஸ்டீபன் பாட்டாக் அமைதியான முறையில்தான் வாழ்ந்து வந்தார். அவருக்கு எந்த அரசியல் அமைப்புடனோ, மத அமைப்புடனோ தொடர்பு கிடையாது” என்று குறிப்பிட்டார்.

ஸ்டீபன் பாட்டாக்கின் தந்தை பெஞ்சமின் பாட்டாக், வங்கி கொள்ளையர். 1960-களில் அமெரிக்க மத்திய புலனாய்வு படையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நபர் இவர்.

சமீப காலமாக ஸ்டீபன் பாட்டாக், சூதாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான டாலர் தொகைகளை பரிமாற்றம் செய்து வந்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் வேட்டையாடுவதற்கான உரிமத்தை பெற்றுள்ளார். விமானிக்கான உரிமமும் பெற்றுள்ளார். லாஸ் வேகாஸ் தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருந்தாலும்கூட, இதில் சர்வதேச பயங்கரவாத தொடர்பு இல்லை என்று அமெரிக்க மத்திய புலனாய்வு படையினர் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலை அவர் நடத்தியதின் பின்னணி என்ன என்பது மட்டும் இன்னும் தெரியவரவில்லை. இதில் துப்பு துலங்காமல் போலீசார் திணறுகின்றனர்.

இதுபற்றி லாஸ் வேகாஸ் நகர மேயர் கரோலின் குட்மேன் கருத்து தெரிவிக்கையில், “என்னை பொறுத்தமட்டில் இந்த தாக்குதல் வெறுப்புணர்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட பைத்தியத்தின் வேலை என்றுதான் சொல்வேன்” என குறிப்பிட்டார்.

லாஸ் வேகாஸ் தாக்குதலின்போது, பல நூறு ரவுண்டுகள் சுட்டுத்தள்ளிய ஸ்டீபன் பாட்டாக், நிமிடத்துக்கு 400 முதல் 800 ரவுண்டுகள் சுடத்தக்க விதத்தில் தானியங்கி முறையில் மாற்றி அமைக்கக்கூடிய அளவு குண்டுகளை கையிருப்பு வைத்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

- மாலைமலர்

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget