மியன்மாரில் இருந்து பங்ளாதேஷ் தப்பிவந்த முகமது சேயுவின் கண்ணீர் கதை ..


முகமது சோயுக்கு வயது 33. மியான்மர், ராக்கின் மாநிலத்தின் புதிடாங் நகரைச் சேர்ந்தவர். அவர் 10 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து பங்களாதேசிற்கு தப்பிச் சென்றார். பங்களாதேஷ், சிட்டாகாங் நகரின் ஒரு அகதிகள் முகாமில் தங்கியிருந்த சோயிடம் பத்திரிக்கையாளர் ’கேட்டி அர்னால்ட்’ எடுத்த நேர்காணலின் தமிழாக்கம் இது.

ஒவ்வொரு ரோஹிங்கிய சமூகத்தினரைப் போலவே புதிடாங் நகரில் நானும் ஒரு விவசாயியாக இருந்தேன். பணியாற்றும் உரிமையோ, அல்லது கல்வி கற்கும் உரிமையோ எங்களுக்குக் கிடையாது.எனவே காவல்துறை, இராணுவம் அல்லது மற்ற அறிவுத்துறை சார்ந்த அலுவலகங்களில் எங்களால் வேலைகளைப் பெற முடியவில்லை. ஒன்று நாங்கள் பண்ணையில் வேலை செய்ய வேண்டும் அல்லது காட்டில் இருந்து மூங்கில் சேகரித்து வர வேண்டும்.

இது ஒரு போதும் போதாது என்ற நிலை. எவ்வித சுதந்திரமும் இல்லாவிட்டாலும் எப்படியோ நாங்கள் உயிர் வாழ்ந்தோம். அந்தந்த நாட்களுக்கு மட்டும் உயிர் வாழ்ந்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, இராணுவமும் உள்ளூர் பெளத்தர்களும் எங்கள் கிராமத்திற்கு வந்தனர். எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.எங்கள் வீடுகளை ஒவ்வொன்றாகத் தீக்கிரையாக்கினர்.எனது சகோதரன்,முகத்தின் ஒரு பக்கத்தில் சுடப்பட்டு அங்கேயே கொல்லப்பட்டான். எஞ்சியவர்கள் தப்பி ஓட வேண்டியிருந்தது. இல்லையென்றால் நாங்களும் கொல்லப்பட்டிருப்போம்.நாங்கள் எங்கு செல்கிறோம் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. தொடர்ந்து பத்து நாட்களாக நடந்து கடைசியாக பங்களாதேஷ் வந்தடைந்தோம்.

என் அம்மாவிற்கு 80 வயது. ஆஸ்துமாவினால் முடங்கி துன்பப்படுவதால் அவரை நான் வழி முழுவதுமாக சுமக்க வேண்டியிருந்தது. நாங்கள் மூன்று ஆறுகளை படகில் கடந்தோம். மீதியை நடந்து கடந்தோம். சில நேரங்களில் நாங்கள் இராணுவத்தை சந்திக்க நேரும் போது அவர்கள் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். சில சமயங்களில் ஏராளமான விலங்குகளின் மத்தியில் காட்டில் தூங்குவோம்.


"வங்காளதேசத்திற்கு செல்லும் வழியில் ஒரு காட்டில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த தாஹேரா பேகம், “தன் வாழ்நாளின் மிகக் கடினமான விஷயம் இதுதான்” என்று கூறினார். (படம் : நன்றி : அல்ஜசீரா)"

எனவே, பல ஆபத்தானத் தடைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் மன உறுதி எங்களை வழிநடத்தியது. இறுதியில் நாங்கள் எல்லையைக் கடந்தோம். இப்போது பங்களாதேசில் இருக்கிறேன் என்பதை நான் மிகவும் ஆறுதலாக நினைக்கிறேன். சொந்த ஊரில் எந்த நேரத்திலும் நாங்கள் கொல்லப்படுவோம்.இங்கே, எங்களது உயிர் பாதுகாப்பாக உள்ளது.ஆனால் பங்களாதேசம் எங்களுக்கு முற்றிலும் புதிது – இந்த நாட்டைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் கல்வியறிவற்றவர்கள். 

நாங்கள் இங்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாது.எனவே மியன்மாரில் அமைதி திரும்பினால் தாய்நாட்டில் எங்காவது தெரிந்த இடத்திற்கு சென்று வாழவே நாங்கள் விரும்புகிறோம்.

ரோஹிங்கியா நெருக்கடியின் இந்த காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் எங்கள் மீதான வன்முறையை நிறுத்த ஒருவரும் மியான்மர் அரசினை வலியுறுத்துவதில்லை. நிச்சயமாக, மியான்மர் அரசு ஒரு தீர்வை கண்டுபிடிக்க உண்மையில் விரும்பவில்லை. இல்லையெனில், இந்நேரம் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் அவர்களுக்கு சர்வதேச அரசாங்கங்கள் ஏன் அழுத்தம் கொடுக்காமல் இருக்கின்றன?

இந்த உலகிற்கு நான் சொல்லும் செய்தி 

“மனிதர்கள் அனைவரும் ஒன்று போலதான். மதங்கள் நம்மைப் பிரிப்பதில்லை.புத்த சமூகத்தினருக்கும் எங்களை போலவே இரத்தமும் சதையும் உள்ளது. அவர்கள் மியான்மரில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறார்கள் என்றால் எங்களால் ஏன் முடியாது – நாமெல்லாம் மனிதர்கள் மேலும் பிறப்பால் நாம் எல்லோரும் சமமானவர்கள்”

-madawalanews

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget