சிர்சா ஆசிரமத்தில் 2ம் நாளாக சோதனை சாமியார் குர்மீத் வீட்டில் இருந்து பெண்கள் விடுதிக்கு ரகசிய சுரங்கம்


சிர்சா: அரியானாவில் சாமியார் குர்மீத்துக்கு சொந்தமான தேரா சச்சா சவுதா தலைமை ஆசிரமத்தில் நேற்றும் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. அதில், குர்மீத் வசிக்கும் வீட்டில் இருந்து பெண் சீடர்கள் தங்கும் விடுதிக்கு ரகசிய சுரங்கம் அமைக்கப்பட்டு இருப்பதும், சட்ட விரோதமாக செயல்பட்ட பட்டாசு தொழிற்சாலையும் கண்டுபிடிக்கப்பட்டது. அரியானாவில் உள்ள சிர்சாவில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. தனது சீடர்களாக இருந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்காக, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சிர்சா ஆசிரமத்தில் போலீசாரும் அரசு நிர்வாகமும் அடங்கிய குழு நேற்று முன்தினம் முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளது. பதிவு செய்யப்படாத ஆடம்பர கார், பழைய ரூ.1000, 500 நோட்டுகள், முக்கிய தகவல்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், பெயர் லேபிள் ஒட்டப்படாத மருந்து பாட்டில்கள் போன்றவை நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை நேற்று 2வது நாளாக தொடர்ந்தது. சோதனை நடத்துவதற்காக சிர்மா மாவட்ட முன்னாள் மாவட்ட நீதிபதி ஆ.கே.எஸ்.பவாரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. 

நேற்று காலை இவருடைய தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார், துணை ராணுவம், பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் அடங்கிய பிரமாண்ட குழு, ஆசிரமத்துக்குள் நுழைந்து அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டது. குர்மீத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதற்காக, முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக ஆசிரமத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார், துணை ராணுவ படை வீரர்கள், அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள், சதிச் செயல் முறியடிப்பு படை வீரர்கள் உள்ளிட்டோர் ஆசிரமத்தின் உள்ளேயும், வெளியேயும் குவிக்கப்பட்டனர். ஆசிரமத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனங்கள், ஜேசிபி இயந்திரங்கள், டிராக்டர்கள் போன்றவையும் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. சந்தேகப்படும் இடங்களில் தோண்டி பார்க்கப்பட்டது. ஆசிரமத்தில் உள்ள ஒரு மறைவான இடத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட பட்டாசு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. 

அங்கு, பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல், ஆசிரமத்தில் குர்மீத் தங்குவதற்காக தனி சொகுசு வீடு உள்ளது. அங்கிருந்து பெண் சீடர்கள் தங்கும் விடுதிக்கு ரகசிய சுரங்கம் அமைக்–்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கம் பெரிய பைபர் பைப் கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இப்போது இந்த சுரங்கம் மண்ணை கொண்டு மூடப்பட்டு இருந்தது. குர்மீத் இதை கடந்த காலங்களில் பயன்படுத்தி இருக்கலாம் என்றும், பாலியல் பலாத்கார சர்ச்சை வெளியானதும் மூடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஆசிர அறை ஒன்றில் ஏகே -47 ரக துப்பாக்கிக்கு குண்டுகள் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி மேகசின் ஒன்றும் கிடைத்தது. அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்து, வெடிமருந்துகளை கைப்பற்றினர். ஆசிரமத்துக்குள் எதற்காக பட்டாசு தொழிற்சாலை நடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. 

800 ஏக்கர் பிரமாண்டம்

* தேரா சச்சா சவுதா ஆசிரமம் 800 ஏக்கரில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதன் உள்ளே வீடுகள், கல்வி நிலையங்கள், மார்க்கெட், மருத்துவமனை, விளையாட்டு அரங்கம், கலை நிகழ்ச்சி பகுதிகள் போன்றவை உள்ளன.
* ஆசிரமம் மிகப் பெரிதாக இருப்பதால் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மூத்த அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
* கலவரம் ஏற்படுவதை தடுப்பதற்காக ஆசிரமத்தை சுற்றி 16 துணை ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
* சிர்சா மாவட்டம் முழுவதும் 41 துணை ராணுவ படை கம்பெனிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது தவிர, ஆயிரக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget