இனவாதத்தை கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த அரசுக்கு நேற்றுவரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது. இன்று முகம் மூடுதல் மற்றும், மதரஸாக்கள் தடை தேவைப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கக் கருத்து தெரிவிக்கும் போதே இவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனாவினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது என்பது உலகநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரிமையை இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு வழங்காமல் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாதம் தழுவிய நயவஞ்சக செயற்பாடு.
மறுக்கப்பட்ட உரிமையை பெற பலர் பல வழிகளில் போராடினர்.
நீதிமன்றம் சென்றமை, கபன் துணி போராட்டம், துஆ பிராத்தனைகள், நோன்புநோற்றல், ஊடகங்கள் மூலமான போராட்டம், மனித உரிமை பேரவை என பல வழிகளிலும் இதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யார் என்ன கூறினாலும் இதற்கு அனுமதி வழங்கமாட்டேன் என இருந்த இந்த அரசை இந்த போராட்டங்களும் இம்ரான் கானின் வருகை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) கண்டனம் உள்ளிட்ட விடயங்களும் அனுமதி வழங்க நிர்பந்தித்திருந்தது.
இதன்மூலம் இந்த அரசு எமக்கு புதிதாக எந்த சலுகைகளும் தரவில்லை. எமது அடிப்படை உரிமையை பல போராட்டங்களின் பின் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் 350 ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட பின்னர்தான் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றவுள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே இதற்கு யாரும் தனிப்பட்ட ரீதியில் உரிமைகோர முடியாது. முக்கியமாக இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு இதற்கான தார்மீக உரிமை கிடையாது.
அவர்கள் இருபதுக்கு வாக்களித்த மறுநாள் இதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இருபதுக்கு வாக்களித்த மறுநாள் அவர்களுக்கு சில அரச வேலைவாய்ப்பும் சில வீதிகளும் கிடைத்தன.ஆனால் ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. நான் கூறிய எந்த போராட்ட்ங்களிலும் அவர்கள் பங்குகொள்ளவில்லை. எவ்வாறு உரிமை மட்டும் கோர முடியும்.
இந்த அரசு என்பது இனவாதத்தை கையிலெடுத்தே ஆட்சிக்கு வந்தது ஆட்சியை கொண்டு செல்லவும் அவர்களுக்கு இனவாதமே தேவைப்படுகிறது.
நேற்றுவரை ஜனாஸா எரிப்பு தேவைப்பட்டது. இன்று முகம் மூடுதல் தடை, மதரஸாக்கள் தடை என கூறி இதன் அடுத்த பாகத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே இவை அனைத்தையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
இந்த போராட்டத்தில் பங்குகொண்ட சிலருக்கு நான் நன்றி கூற வேண்டும். ஆரம்பம் முதல் இந்த போராட்டத்தில் பங்குகொண்ட இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், சிறிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சகோதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.